சென்னை : சென்னை மாநகராட்சியில் கார் நிறுத்தத்திற்கு இடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்கும் வகையில் புதிய விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது. சாலை ஓரங்களில் நிற்கும் கார்களால் இடையூறு ஏற்படுவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக கார் வாங்குபவர்கள், காரை பதிவு செய்யும்போது அதற்கான பார்க்கிங் இடம் இருப்பதை உறுதி செய்து, அதற்கான சான்றை இணைப்பதை கட்டாயமாக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் பரிந்துரை அளித்துள்ளது. இதன்படி, ஒருவர் எத்தனை காரை பதிவு செய்ய விரும்புகிறாரோ, அத்தனை காருக்குமான பார்க்கிங் வசதி இருப்பதற்கான ஆவணத்தை காட்ட வேண்டும் என்பது அவசியம்.
ஒவ்வொரு பகுதியிலும் அதிக தேவை, நடுத்தர தேவை மற்றும் குறைந்த தேவை என மூன்று வகையான பார்க்கிங் உருவாக்கப்பட உள்ளது. அதற்கு கட்டணத்தை செலுத்தி கார்களை பார்க்கிங் செய்யும் இடம் என காட்டி பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல அகலமான சாலைகளில் பார்க்கிங் உருவாக்கப்பட்டு அந்த இடங்களில் கார்களை நிறுத்திக் கொள்ளலாம். மேலும் குடியிருப்பாளர்கள், மால்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கான பார்க்கிங்கை உருவாக்க வேண்டும் எனவும், 20% மின்சார கார்களின் சார்ஜிங் ஸ்டேஷனுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை சட்டமாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
The post பார்க்கிங் இடம் இல்லாவிட்டால் கார் வாங்க முடியாது.. சென்னை மாநகராட்சியில் விரைவில் அமலுக்கு வருகிறது புதிய விதிமுறை!! appeared first on Dinakaran.