புதுடெல்லி: 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான இந்த விருதுகள் பட்டியலில், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது ‘பார்க்கிங்’ திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தப் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருதும், இப்படத்துக்கு சிறந்த திரைக்கதைக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 விருதுகள் தட்டிய பார்க்கிங் – ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியிருந்தார். இப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தது. ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா, ராமா ராஜேந்திரா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.