*அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்
தர்மபுரி : நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளியில் நடந்த அரசு விழாவில், 524 பேருக்கு ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை, அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு, ஊரக வளர்ச்சி மற்றும் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.15.99 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் 7 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 524 பயனாளிகளுக்கு ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். விழாவிற்கு கலெக்டர் சாந்தி தலைமை வகித்தார். திமுக எம்பி ஆ.மணி முன்னிலை வகித்தார்.
விழாவில், அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில், பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று(நேற்று) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் நாள்தோறும் மக்களின் அடிப்படை தேவைகளுக்கும், நலனுக்கும் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தலின் போது அளிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், பல்வேறு புதிய திட்ட பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கிராமங்கள் தோறும் பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டிடங்களும், அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் பாலஜங்கமனஅள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில், 524 பயனாளிகளுக்கு ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.மேலும், ரூ.16கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல், தமிழக முதல்வர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சாதனைகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளின் மூலம் பயன் பெற்ற பயனாளிகளோ சான்றாக உள்ளனர். பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2ம் கட்டத்திற்கு, தற்போது ஜப்பான் குழுவினர் ஆய்வினை மேற்கொண்டு சென்றுள்ளனர்.
விரைவில் இப்பணிகளும் முடிவு பெற்று, பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். வத்தல் மலைப்பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், பயணிகளுக்காக பஸ் இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1 கோடியே 18 லட்சம் மகளிர், மாதந்தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 2.84 லட்சம் மகளிர் மாதம் தோறும் ரூ.1000 பெற்று வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட திமுக செயலாளர்கள் தடங்கம் சுப்ரமணி, பழனியப்பன், முன்னாள் எம்எல்ஏ இன்பசேகரன், தர்மபுரி ஆர்டிஓ காயத்ரி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மகாத்மா, ஒன்றிய செயலாளர் ஏஎஸ் சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் பிசி துரைசாமி, பிகே முரளி, மிதுன் காளியப்பன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post பாலஜங்கமனஅள்ளியில் 524 பேருக்கு ₹5.24 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.