சென்னை: பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவாக மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று வினா – விடை நேரத்தின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மாணிக்கம், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) பி.செல்வம், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் பி.கார்த்திகேயன் ஆகியோர் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மாணிக்கம்; குளித்தலை தொகுதி, குளித்தலை நகரத்தில் உள்ள அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான பழுதடைந்துள்ள திருமண மண்டபத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு; கடம்பனேஸ்வரர் திருக்கோயிலுக்கு கடந்த ஆண்டு ஜுலை 12 அன்று ரூ.50 லட்சம் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. உறுப்பினர் கூறிய திருமண மண்டபமானது 64 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அது 2007 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இல்லை. பழுதடைந்த திருமண மண்டபத்தை தற்போது இடித்து அகற்றி இருக்கின்றோம். திருமண மண்டபம் வேண்டும் என்ற நம்முடைய உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பரிசீலித்த போது அந்த கோயிலுக்கு வைப்பு நிதியும் ரூ.40 லட்சம் தான் இருக்கின்றது. ஆணையரின் பொது நலநிதியும் தர முடியாத ஒரு சூழல் இருந்தாலும், பெரிய கோயிலிலிருந்து கடன் பெற்று அவரது கோரிக்கையை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பிலே திருமண மண்டப அறிவிப்பு இடம்பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மாணிக்கம்; குளித்தலை நகரத்தில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயிலுக்கு திருமண மண்டபம் வேண்டும் என்ற என்னுடைய கோரிக்கையை ஏற்று வருங்காலத்தில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அறிவித்து இருக்கின்ற அமைச்சருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு, அய்யர்மலையில் அமைந்துள்ள இரத்தினகிரீஸ்வரர் கோயில் என்பது சுமார் 1600 படிகளை கொண்ட உயரமான மலை. அந்த மலைக்கு ரோப் கார் வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நமது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
அதன் பிறகு வந்த ஆட்சியில் தான் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு மீண்டும் 2021 ஆம் ஆண்டு திராவிட மாடல் நாயகன் முதல்வர் அவர்களின் ஆட்சியில் அமைச்சர் சேகர்பாபு அவர்களுடைய முயற்சியிலே மீண்டும் ரூ.3 கோடி ஒதுக்கப்பட்டு அந்த கோயிலுக்கு ரோப்கார் அமைத்து 2024 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 24 ஆம் தேதி முதல்வர் அவர்களால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டு ரோப்கார் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து, அதற்காக முதல்வர் அவர்களுக்கும் அமைச்சர் அவர்களுக்கும் இந்த தொகுதியின் மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடம்பூரில் கோயிலுக்கு சொந்தமான இடம் காவிரி ஆற்றங்கரையில் ஒரு 15 ஏக்கர் நிலம் இருக்கின்றது. அது ஆண்டுதோறும் தைப்பூசம் தை மாதம் தகுணம் என்று திருமணம் நடைபெறும், அந்த திருவிழா நடைபெறும். அதில் ஒரு பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கு நகராட்சிக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தால் கோயிலுக்கும் வருமானம் வரும். ஆகவே அங்கு பூங்கா அமைக்க அமைச்சர் ஆவணம் செய்வாரா என கேட்டு அமைகிறேன் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு; கோயிலுக்கு சொந்தமான இடங்களில் பொழுதுபோக்கு பூங்காக்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை. இருந்தாலும் அவர் கூறியபடி அங்கு நந்தவனங்களோ அல்லது இளைப்பாறும் மண்டபங்களோ அமைத்து தருவதற்கு உண்டான நடவடிக்கை நிச்சயம் எடுப்போம் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மாணிக்கம்; குளித்தலை நகரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கும், இராஜேந்திரம், ஈஸ்வரன் கோயிலுக்கும் குடமுழுக்கு எப்போது நடைபெறும் என்பதை அமைச்சர் அவர்கள் மூலம் கேட்டு அமைகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்; உறுப்பினர் கோரிய பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எவ்வளவு விரைவாக திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு மேற்கொள்ள முடியுமோ, அவ்வளவு விரைவாக மேற்கொள்ளப்படும். அவர் கூறிய மற்றொரு திருக்கோயிலான ஈஸ்வரன் கோயிலிலும் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதையும் விரைவாக முடித்து திருக்குடமுழுக்கு வேண்டிய அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்தப்படும் என்று கூறினார்.
சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் (எ) பி.செல்வம்; மேலூர் சட்டமன்ற தொகுதி, அழகர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பாக இருபாலர் படிக்கும் அருள்மிகு சுந்தர ராஜா உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பெண்களின் பாதுகாப்பு கருதி பெண்களுக்கு மட்டும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படுமா என்று தாங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன் என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர்; உறுப்பினர் கோரிய பள்ளிக்கு ஏற்கனவே கூடுதலாக ஆறு வகுப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதில் மூன்று வகுப்பறைகள் பணிகள் நிறைவுற்றுள்ளன. அவர் கோரியபடி அந்த பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்கு அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டிருக்கின்றது. இந்த ஆண்டு நிச்சயம் அதற்குண்டான அனுமதி கிடைத்துவிடும் என்று நம்புகிறோம். அந்த பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்போது தேவைப்படுகின்ற கட்டமைப்புகளையும் முன்கூட்டியே அனைத்து பணிகளையும் மேற்கொண்டு இருக்கின்றோம். அதில் ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த பள்ளியில் 105 மாணவிகள் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.
அந்த பள்ளியானது ஆண்டுதோறும் நூறு சதவீதம் தேர்ச்சி பெறுகின்ற பள்ளியாகும். அதோடு மட்டுமில்லாமல் 2024-25 ஆம் ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் அந்த பள்ளியைச் சார்ந்த மூன்று மாணவிகள் கிரிக்கெட், கபாடி ஆகிய போட்டிகளில் மாநிலத்திலே முதன்மையாக வந்தனர் என்பதால் அந்த பள்ளியின் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு அறிவிப்பிலே அதற்கான அறிவிப்பு இடம் பெற்று, அப்பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவேற்றி தருவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று விளக்கம் அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார்: வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வந்தவாசி நகரத்தின் அருகில் உள்ள வெண்குன்றம் கிராமத்தில் தவனகிரிநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த கோயில். அந்த கோயிலுக்கு ஒவ்வொரு கார்த்திகை தீபத்துக்கும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த கோயிலுக்கு சொந்தமான நிலம் 41/1, 41/2 என்ற சர்வே எண்களில் வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் 4.5 ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அந்த இடத்தில் கோயிலுக்கு கல்யாண மண்டபம், ஒரு வணிக வளாகம் அமைக்க அமைச்சர் முன்வருவாரா என்பதை தாங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு: உறுப்பினர் அம்பேத்குமார் பலமுறை இது தொடர்பாக நம்முடைய பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களிடம் அழுத்தம் கொடுத்து கேட்டிருக்கின்றார். திருமண மண்டபங்களை பொறுத்தளவில் தொடர் செலவு தொடரா செலவு என்று இரு கூறுகளை ஆராய வேண்டி இருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 84 திருமண மண்டபங்களை புதிதாக கட்டிக் கொண்டிருக்கின்றோம். அதில் 37 முடிவுற்று இருக்கின்றது. உறுப்பினரின் கோரிக்கையை ஆய்வு செய்து சாத்திய கூறுகள் இருப்பின் பரிசீலிக்கப்படும். வழியிருக்கும் என்றால் மனமிருக்கும். ஆகவே அவர் கூறிய அந்த திருமணம் மண்டபத்தை கட்டுவதற்குண்டான ஆய்வை மீண்டும் அவரை அழைத்துச் சென்று மேற்கொள்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம்: தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகின்ற பெரிய கோயிலை கட்டிய இராஜராஜ சோழனுக்கு 1972 -ல் அன்றைய முதலமைச்சர் சிலை வைத்தார். உள்ளே வைக்க முடியாது என்று தொல்லியல் துறை சொன்னதை வெளியிலே வைத்தார்கள். மாமன்னன் கப்பற் படையை உலகுக்கே அறிமுகப்படுத்தியவர் தெற்கு ஆசியாவையே வென்றவன், இந்திய கடற்படைக்கே இராஜராஜ சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள பெரிய கோயிலை கட்டிய அவருக்கு 100 அடி சிலை வைக்க வேண்டுமென அமைச்சர் கேட்டு அமைகிறேன் என்றார்.
இது குறித்து பேரவையில் பதிலளித்த அமைச்சர்: மன்னர்களின் புகழை போற்றி பாராட்டுகின்ற அரசு திராவிட மாடல் அரசு என்பதற்கு ஒப்பாக 1000 ஆண்டு சதய விழாவை எடுத்த ஆட்சி கலைஞர் அவர்களின் ஆட்சி என்பதை தெரிவித்துக் கொண்டு, மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் கோரிக்கைக்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு, வாய்ப்பிருந்தால் நிச்சயம் சிலை அமைப்பதற்குண்டான நடவடிக்கையை இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மேற்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினர் பி.கார்த்திகேயன்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை வணங்கி என்னுடைய வேலூர் தொகுதியில் ஆரணி ரோட்டில் அமைந்திருக்கின்ற திரௌபதி அம்மன் கோயிலுக்கு திருப்பணி செய்ய வேண்டும். 300 ஆண்டு பழமையான கோயில். ரோடு போடப்பட்டதால் எட்டு அடி ஒன்பது அடி பள்ளத்தில் போய்விட்டது திரௌபதி அம்மன் கோயில். அதற்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் கருங்கல் திருப்பணி செய்ய திட்டமிட்டு இருக்கிறோம். அதற்கு அமைச்சர் திருப்பணிக்காக நிதி தர வேண்டும் என்று கேட்டு அமைகிறேன்.
இதற்கு பதிலளித்த அமைச்சர்: உறுப்பினர் கோரிய நிதி அந்த மண்டலத்தின் இணை ஆணையர் பரிந்துரையோடு ஆணையாளருக்கு சமர்ப்பிக்கப்படுமானால் உடனடியாக அதற்குண்டான நிதியை ஒதுக்கி தரப்படும். அதோடு மட்டுமல்லாமல் இந்த லிப்டிங் முறையை இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் இதுவரையில் 9 கோயில்களில் வெற்றிகரமாக முடித்து இருக்கின்றோம். நம்முடைய பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் வைத்த கோரிக்கையை ஏற்று சூரிய ஒளி நேராக ஈஸ்வரன் மீது படுகின்ற வரலாற்று சிறப்புமிக்க கோயிலான இரவீஸ்வரர் கோயிலை லிப்டிங் முறையில் எட்டடி பள்ளத்திலிருந்து தரை மட்டத்திற்கு அந்த கோயிலை உயர்த்துகின்ற பணி நடந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் நீங்கள் கூறிய அந்த திருக்கோயிலை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்களை அனுப்பி பரிசோதிக்க சொல்கிறோம். லிப்டிங் முறையை பயன்படுத்த முடியும் என்றால் செலவும் குறைவாக இருக்கும். அதற்குண்டான ஏற்பாடுகளை மேற்கொள்வோம். நீங்கள் கோரிய கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.
The post பாலதண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.