சென்னை: “பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் தொடங்கி ராமேஸ்வரம் குளியலறை கேமரா வைத்த காமுகன், அண்ணா நகர் சிறுமி பாலியல் வழக்கு வரை பாலியல் குற்றாவாளி “சார்களின்” சரணாலயம் அதிமுக என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியிருக்கிறது. அண்ணாநகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தனது கட்சிக்காரரை காப்பாற்ற அவர் நடத்திய கபடநாடகம்தான் ‘யார் அந்த சார்?’ என்பது இன்று மக்களிடம் அம்பலபட்டுவிட்டது” என்று அமைச்சர் சிவசங்கர் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் பாதுகாப்பில் தமிழக மக்களிடம் நற்பெயர் பெற்று வரும் திராவிட மாடல் அரசின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தவேண்டும் எனும் சிறுபுத்தியோடு தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அருவருக்கத்தக்க வதந்தியைப் தொடர்ந்து பரப்பி வந்தார் பச்சைப் பொய் பழனிசாமி. அப்படித்தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் எப்படியாவது திமுகவின் பெயரை சேர்த்துவிட வேண்டும் எனும் இழிவான நோக்கத்தோடு தொடர்ந்து யார் அந்த சார்? என வதந்தி அரசியலை நடத்தி வந்தார்.