புதுடெல்லி: பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, ஆடையை இழுப்பது பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகாது என்ற அலகாபாத் உயர் நீதின்றத்தின் தீர்ப்பு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இது தவறான தீர்ப்பு என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, "இது மிகவும் தவறான முடிவு, நான் இம்முடிவை ஆதரிக்கவில்லை. நாகரிகமான சமூகத்தில் இத்தகைய முடிவுகளுக்கு இடமில்லை. இந்தத் தீர்ப்பு சமூகத்தில் தவறான பாதிப்பை ஏற்படுத்தும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்" என்று தெரிவித்தார்.