மதுரை: கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோரிய வழக்கில், மதுரை போலீசாரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கோவை மாவட்ட போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இதனடிப்படையில், ஈஷா யோகா மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மதுரை அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தேன். புகாருக்கு ரசீது வழங்கவில்லை. நடவடிக்கையும் இல்லை. ஒரு வழக்கில் உத்தரப்பிரதேச அரசு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இதனடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஆனால் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே எனது புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், டிஜிபி சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற பாலியல் குற்றங்கள், விதிமீறல்கள் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக தகவல் தெரிந்த நபர்கள் உடனடியாக புகார் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. எனினும் மதுரை அண்ணாநகர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
The post பாலியல் வன்முறை புகார் தொடர்பாக கோவை ஈஷா மையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: மதுரை போலீஸ் தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.