மதுரை: “எவ்வளவு நாள் இந்த அழுக்கை சுமப்பது என்பதால், வேறு வழியின்றி என் மீதான புகாருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இந்த வழக்கில் இரு தரப்பும் பேசி சமரசம் செய்து தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்டதற்கு, “அதற்கு வாய்ப்பு இல்லை. அது தேவையும் இல்லை” என்றார் சீமான்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல நிகழ்ச்சி இன்று (மார்ச் 3) நடந்தது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். இதற்காக அவர் மதுரை காளவாசல் பகுதியிலுள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் சீமான் கூறியது: “என் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கில் தடைதான் கோரியிருந்தோம். இது ஓர் ஆதாரமில்லாத அவதூறு வழக்குதான். அதனால், உயர் நீதிமன்றத்திலும் அதே கோரிக்கைதான் வைத்திருந்தோம். இதைக் கேட்கும், பார்க்கும் அனைவருக்குமே தெரியும். அதனால்தான், உயர் நீதிமன்றத்தில் நானே இந்த வழக்கைத் தொடர்ந்தேன்.