சென்னை: இந்தியாவின் பால் உற்பத்தியில் 10.317மில்லியன் டன் பால் உற்பத்தி செய்து பதினோராவது இடத்தில் இருக்கும் தமிழகம், திமுக ஆட்சியில் வரலாறு படைப்பதாக பால்வளத்துறை அமைச்சர் கூறுவது தமிழக மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய மோசடியான செயல் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பாதவது: “தமிழகத்தின் பால் உற்பத்தி தொடர்பாக ‘கிராம பொருளாதாரத்தை உயர்த்தும் திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் வரலாறு படைக்கும் தமிழ்நாடு’ எனும் தலைப்பில் கடந்த 27.11.2024 அன்று பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை ‘பழைய மொந்தையில் புதிய கள்’ என்கிற சொலவடையை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.