நெல்லை : பாளையங்கோட்டையில் பிளக்ஸ் பேனர் கட்டிய போது மின் கம்பியில் உரசியதில் தொழிலாளி தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக இறந்தார்.நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பேச்சிமுத்து (30). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (31).
இவர்கள் கடைகள், வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் திருமண மண்டபங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துக் கொடுக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரயில்வே கேட் அருகே உள்ள மரக்கதவுகள் விற்பனை செய்யும் கடைக்கான விளம்பர பிளக்ஸ் பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
இதையடுத்து பிளக்ஸ் பேனர் ஒன்றை இரும்பு பைப்பில் பொருத்தி அதனை சாலையோரத்தில் நடுவதற்காக பேச்சிமுத்துவும், சதீஷ்குமாரும் தூக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மேலே செல்லும் மின் கம்பியில் பிளக்ஸ் பேனரின் இரும்பு பைப் உரசியது. இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதில் பேச்சிமுத்து படுகாயம் அடைந்து மயங்கி விழுந்தார்.
அவரை சக தொழிலாளர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸில் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பேச்சிமுத்து இறந்தார். அவரது நண்பர் சதீஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது தொடர்பாக பாளை யங்கோட்டை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், எஸ்ஐ முத்துப்பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்த சம்பவம் கங்கைகொண்டானில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post பாளையில் பிளக்ஸ் பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.