நெல்லை: தமிழர்களின் பாரம்பரியம், தொன்மையை பறை சாற்றும் வகையில், நெல்லை ரெட்டியார்பட்டியில் நெல்லை – கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரூ.56.36 கோடியில் 13.02 ஏக்கர் பரப்பளவில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என 3 தனித்தனி வளாகங்கள் அமைக்கப்பட்டு 3 இடங்களிலும் அகழாய்வின் போது கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் மண்டபம் இடையேயான கண்ணாடி இழை பாலத்தை பார்வையிட்டார். பாலம் திறந்து வைக்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகின்ற நிலையில் பாலத்தின் நிலை, பயணிகள் வருகை தொடர்பாகவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி: சுங்கச்சாவடிக்கான பாஸ்டேக் கணக்கில் பணமில்லை என்பதால் அபராதம் விதிப்போம் என்பது மக்கள் மீது வைக்கும் சுமை. தவறு. அதை நியாயப்படுத்த விரும்பவில்லை. டெல்லிக்கு செல்லும் போது தமிழ்நாட்டு மக்களின் சார்பில் இது குறித்து வலியுறுத்துவேன். சாலைகளை சீரமைக்க ஒன்றிய அரசிடம் நிதி கேட்டோம். ஆனால் ஒன்றிய அரசு நிதி தரவில்லை. சிறிது சிறிதாக நிதி தருகின்றனர். கன்னியாகுமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி பாலம் மாறி இருக்கிறது.
இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் இந்த பாலத்தை பார்க்க வந்துகொண்டு இருக்கின்றனர். ஒரே நேரத்தில் 650 பேர் வந்தாலும் தாங்கும் சக்தி கொண்டது கண்ணாடி பாலம். 150 கி.மீ வேகத்தில் புயல் அடித்தாலும் பாலம் உறுதித்தன்மையுடன் இருக்கும். 3.50 லட்சம் பேர் இதுவரை பாலத்தை பார்வையிட்டுள்ளனர். பாலம் உறுதித்தன்மை சரியாக உள்ளதா என்பதை பார்க்க சென்னை ஐஐடி துறை பேராசிரியர்கள், கடல்சார் துறை சார்ந்த பேராசிரியர்கள் வந்துள்ளனர். தலைமை பொறியாளர் தலைமையில் இங்கு ஆய்வு செய்ததில் பாலம் உறுதியாக உள்ளது. பாலத்தில் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
The post பாஸ்டேக் கணக்கில் பணமில்லை என்றால் அபராதம் விதிப்பது தவறு: அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.