புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை நிறுத்தி வைப்பது நியாயமல்ல என்று நாடாளுமன்ற நிலைக் குழு கண்டித்துள்ளது. மேலும், சர்வ சிக்‌ஷா அபியான் நிதியை உடனடியாக விடுவிக்க நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது.
புதிய தேசிய கல்விக் கொள்கையை (என்இபி) செயல்படுத்த திமுக தலைமையிலான தமிழக அரசு மறுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.2,100 கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய கல்வித் துறை அமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. இப்பிரச்சனையில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.