டெல் அவிவ்: காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாக, ஹமாஸ்களால் விடுவிக்கப்படும் பிணைக் கைதிகளை வரவேற்க இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கான கவுன்டவுன் தொடங்கியுள்ள நிலையில், தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள காசா மக்களும் தங்களது வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையில் உள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி, இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. இதில், காசாவில் 46,700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது. 23 லட்சம் மக்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்துள்ளனர். காசாவில் பரவலான அழிவு ஏற்பட்டுள்ளது.