புதுச்சேரி: புதுச்சேரி சட்டப் பேரவை வரும் பிப்.12-ல் கூடுகிறது என்றும், மாநில நலனுக்கு எதிராக இருக்கும் எந்த அதிகாரியாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சட்டப் பேரவையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''15-வது புதுச்சேரி சட்டப் பேரவையின் 5-வது கூட்டத் தொடர் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கூட்டப்பட்டு, 2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் 11 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து 15-வது சட்டப்பேரவையின் 5-வது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி வருகின்ற பிப்.12-ம் தேதி காலை 9.30 மணி அளவில் பேரவைக் கூடத்தில் கூட்டப்படுகிறது. மேலும் 2024-2025 நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான சட்ட முன்வரைவு வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட இருக்கிறது.