பாங்காக்: பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாடு கடந்த 2ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று பாங்காக் புறப்பட்டுச் சென்றார். பாங்காக் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தாய்லாந்து துணை பிரதமரும் போக்குவரத்து அமைச்சருமான சூர்யா ஜங்ருங்கிராங்கிட் நேரில் வரவேற்றார்.
அங்கிருந்து தாய்லாந்து பிரதமரின் அரசு இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு பாரம்பரிய முறைப்படி ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை வரவேற்ற தாய்லாந்து பிரதமர் ஷினவத்ரா, புத்தர் போதனைகள் அடங்கிய புனித நூல்களை பரிசளித்தார். மேலும், பிரதமர் மோடியின் வருகையையொட்டி, 18ம் நூற்றாண்டு ராமாயண சுவர் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு தபால் தலையை தாய்லாந்து அரசு வெளியிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி மற்றும் ஷினவத்ரா இடையேயான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், இரு நாடுகளுக்கும் இடையே குறு, சிறு, நடுத்தர தொழில்துறை, கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கடந்த 28ம் தேதி தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இந்தியர்கள் சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கும் தாய்லாந்திற்கும் இடையே சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். பரஸ்பர வர்த்தகம், முதலீடு மற்றும் வணிகங்களுக்கு இடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல் கொள்கைக்கும், இந்தோ-பசிபிக் தொலைநோக்கு பார்வையில் தாய்லாந்து முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
எங்கள் உறவை அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேற்ற முடிவு செய்துள்ளோம். இந்தோ-பசிபிக் பகுதியில், சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை இந்தியாவும், தாய்லாந்தும் ஆதரிக்கின்றன. இந்தியாவிற்கும் தாய்லாந்துக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான உறவு ஆழமான கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. ராமாயணக் கதை தாய்லாந்து நாட்டுப்புற வாழ்க்கையில் ஆழமாக பின்னப்பட்டிருக்கிறது’’ என்றார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து, வங்காள விரிகுடாவை ஒட்டி நாடுகளான இந்தியா, வங்கதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகியவை இணைந்து அமைத்த பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது. இதில், கடல்சார் ஒத்துழைப்பு குறித்து 7 நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாளை இலங்கை செல்கிறார். இலங்கையில் அனுர குமார திசநாயகே அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
* வங்கதேசம், நேபாள தலைவர்களுடன் இன்று சந்திப்பு
தாய்லாந்து பயணத்தின் 2ம் நாளான இன்று பிரதமர் மோடி, வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் மற்றும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி ஆகியோரை நேரில் சந்தித்து தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு தப்பி ஓடி இந்தியாவில் தஞ்சமடைந்த பிறகு இரு நாடுகளுக்கு இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ளது.
யூனுஸ் தலைமையிலான வங்தேசம் சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இதே போல மற்றொரு அண்டை நாடான நேபாளமும் சீனாவுடனான உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் தருகிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி அவ்விரு நாடுகளின் தலைவர்களை சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
The post பிம்ஸ்டெக் மாநாட்டையொட்டி தாய்லாந்து பிரதமருடன் மோடி சந்திப்பு: இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.