ராஜபாளையம்: கோவை மாவட்டம் பொள்ளாச்சி டி.கோட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். திருமணமானவர். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணுடன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் தியாகராஜன், கருவை கலைக்குமாறு கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்தப் பெண், 5 மாதமானதால், கருவை கலைக்க முடியாத சூழ்நிலை உள்ளது என டாக்டர் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து சில மாதங்களில் அந்தப் பெண் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தருவதாக கூறிய தியாகராஜன் தலைமறைவானார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அதே மருத்துவமனையில் அறிமுகமான ஒரு பெண்ணிடம் தனது சூழ்நிலையை கூறினார்.
குழந்தையை தன்னால் வளர்க்க முடியாது எனவும், தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தையை, மதுக்கரையை சேர்ந்த ஒரு பெண்ணிடம் விற்று மருத்துவ செலவிற்கு பணம் செலுத்தியுள்ளார். குழந்தையை சட்டப்படி தத்து கொடுக்கவில்லை. மருத்துவமனையில் இருந்து ஊருக்கு சென்ற அந்தப் பெண் மற்றவர்களுடன் சகஜமாக பேசி வந்துள்ளார். ஆனால் குழந்தை பிறந்த விவகாரம் அரசல் புரசலாக தெரிந்துள்ளது.
இது தொடர்பாக தியாகராஜனின் மனைவியும், அந்த பெண்ணிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், மன வேதனை அடைந்த அந்த பெண், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பெற்ற குழந்தையை பணத்திற்காக விற்ற குற்றத்திற்காக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
The post பிரசவ செலவுக்கு பணம் இல்லாததால் பெண் குழந்தையை விற்ற தாய்: கள்ளக்காதலன் கைது appeared first on Dinakaran.