ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மணல் மேட்டில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரசேகரின் வெற்றிக்கு அயராது பாடுபடுவோம். 2026 சட்டமன்ற தேர்தலில் கிழக்கு தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். பெரியாரை இழிவாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் நிருபர்களிடம் மக்கள் ராஜன் கூறுகையில், ‘திமுக வேட்பாளர் சந்திரகுமார் வெற்றிக்கு கடுமையாக பாடுபடுவோம்.
எடப்பாடி பழனிசாமி பய உணர்வு காரணமாக போட்டியிடவில்லை. அதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நலத்திட்டங்கள்தான் காரணம். புனிதரான பெரியார் பற்றி தரக்குறைவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கை என்பது கண்டிக்கத்தக்கது. சீமான் தனது பேச்சை திரும்ப பெறவில்லை என்றால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிரசாரம் செய்ய வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம். குறிப்பாக, பிரசாரம் செய்ய முடியாமல் இடையூறு விளைவிக்கும் வகையில் எதிர்ப்பு தெரிவிப்போம்’ என்றார்.
The post பிரசாரம் செய்ய சீமான் வந்தால் தடுப்போம்: காங்கிரஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.