புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து ஆட்சேபனைக்குரிய கார்ட்டூன்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில், கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியாவுக்கு கட்டாய கைது நடவடிக்கையில் இருந்து உச்ச நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு அளித்துள்ளது.
இருப்பினும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பிறரை புண்படுத்தும் விதமான பதிவுகளைப் பகிர்ந்தால், சட்டத்தின் கீழ் ஹேமந்த் மாளவியா மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு சுதந்திரம் உள்ளது என்று நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அரவிந்த் குமார் அமர்வு எச்சரித்தது. மேலும், இந்த ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குறித்து மாளவியாவை கண்டித்த நீதிபதி துலியா, "இது மிகவும் அதிகப்படியானது. இப்போதெல்லாம், மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்" என்று கூறினார்.