மாஸ்கோ:“ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய சர்வதேச விவகார கவுன்சில் (ஆர்ஐஏசி) சார்பில், “ரஷ்யா – இந்தியா : புதிய இருதரப்பு கொள்கை” என்ற தலைப்பில் கடந்த புதன்கிழமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பங்கேற்றார். அதன்பின்னர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவில் 3-வது முறை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, முதல் நாடாக ரஷ்யாவுக்கு நரேந்திர மோடி வந்தார். அப்போது, இந்தியாவுக்கு வரவேண்டும் என்று அதிபர் புதினுக்கு அழைப்பு விடுத்தார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அதிபர் புதின் விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.