புதுச்சேரி: பிரதமர் மோடியின் பெஸ்ட் புதுச்சேரிக்கு எதிராக முதல்வர் ரங்கசாமி செயல்படுகிறார் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரியில் புத்தாண்டு முதல் பெட்ரோல், டீசல் விலை ரூ. 2 உயர்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக முன்னாள் மாநிலத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாமிநாதன் கூறியதாவது: ''புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக பிற மாநிலங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தபட்சம் ரூ 5 வித்தியாசமாக இருந்தது. இதனால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளியூர் வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருப்பதற்காகவே புதுச்சேரியை விரும்பி வருகை தந்தனர்.