வாஷிங்டன்: 2025-ம் ஆண்டுக்கான மெகா கோடீஸ்வரர்கள் (பில்லியனர்கள்) பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில், 902 பில்லியனர்களுடன் அமெரிக்கா முதலிடத்திலும், 200 பில்லியனர்களுடன் இந்தியா 3-வது இடத்திலும் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் உலக கோடீஸ்வர்களின் பட்டியலை அவர்களது சொத்து மதிப்பின் அடிப்படையில் ஆய்வு செய்து போர்ப்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவில் கடந்தாண்டில் 813-ஆக இருந்த பில்லியனர்கள் எண்ணிக்கை நடப்பாண்டில் 902-ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், மெகா கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. எலான் மஸ்க் (342 பில்லியன் டாலர்), மார்க் ஸுகர்பெர்க் (216 பில்லியன் டாலர்), ஜெப் பெசோஸ் (215 பில்லியன் டாலர்) ஆகியோர் இந்த பட்டியலில் முன்னிலையில் உள்ளனர்.