சென்னை: நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து பொய்யான தகவலையே கூறி வருகிறார் என சங்ககிரி ராஜ்குமார் குற்றச்சாட்டியுள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சித் தொடங்கியதிலிருந்தேப் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கொள்கைத் தலைவனாகக் கொண்டு செயல்படும் இவர், அவரை சந்தித்தது குறித்து தொடர்ந்து மேடைகளில் பேசி வந்தார். அப்போதே பலர் சீமான் கூறுவதெல்லாம் பொய் என்றெல்லாம் விமர்சித்தனர். இந்த விவகாரங்கள் அரசியல் வட்டாரத்தில் விவாதமானது. இந்த நிலையில் தான் சமீபத்தில் பெரியார் குறித்தும், அவரின் கொள்கைகள் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்து சீமான் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனால், பல அரசியல் தலைவர்களும் சீமானுக்கு கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். இதற்கிடையில்தான் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், சீமான் பிரபாகரனை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால், அந்தப் புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவர் என்கிற அடிப்படையில் என எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து சீமான் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், சங்ககிரி ராஜ்குமார் பற்றி குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அந்த குற்றச்சாட்டை மறுத்த சங்ககிரி ராஜ்குமார் பதிலடி கொடுக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் சங்ககிரி ராஜ்குமார் கூறியதாவது; நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தொடர்ந்து பொய்யான தகவலையே கூறி வருகிறார். பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படத்தை நான்தான் எடிட் செய்து கொடுத்தேன். உண்மைக்கு மாறாக பேசிய சீமான் கண்டிப்பாக ஆதாரம் அளிக்க வேண்டும். சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் என்று கூறியது சீமானுக்கு பிடிக்கவில்லை. மேலும், பிரபாகரனுடன் சீமான் இருப்பது போன்ற படம் வெட்டி ஒட்டப்பட்டதுதான் என சங்ககிரி ராஜ்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
The post பிரபாகரனுடன் சீமான்.. நான்தான் எடிட் பண்ணிக் கொடுத்தது; தொடர்ந்து பொய்யான தகவலையே கூறிகிறார்: சங்ககிரி ராஜ்குமார் appeared first on Dinakaran.