அருண் ஈவண்ட்ஸ் சார்பில் பிரபல நடிகரும், நடனக் கலைஞருமான பிரபுதேவாவின் லைவ் நடன நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிப்.22-ம் தேதி நடைபெறுகிறது. இது பிரபுதேவாவின் முதல் லைவ் நிகழ்ச்சியாகும்.
தமிழ் சினிமாவில் நடனக் கலைஞராக அறிமுகமான பிரபுதேவா, பரதம், ஃபோக், வெஸ்டர்ன் வகைகளின் கலவையை தனது நடனத்தில் வெளிப்படுத்தினார். இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 1989-ல் வெளியான இந்து என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான அவர், காதலன், லவ் பேர்ட்ஸ் என பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். குறிப்பாக மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு சிறந்த முறையில் நடனம் அமைத்ததற்கு தேசிய திரைப்பட விருதையும் பெற்றார்.