பிராக்: செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 7-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்விந்த் சிதம்பரம், நெதர்லாந்தின் முதல் நிலை வீரரான அனிஷ் கிரியை எதிர்த்து விளையாடினார். கருப்பு காய்களுடன் விளையாடிய அர்விந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் லைவ் ரேட்டிங்கில் அர்விந்த் சிதம்பரம் உலக தரவரிசையில் 14-வது இடத்துக்கும், இந்திய வீரர்களில் 4-வது இடத்துக்கும் முன்னேறினார்.
மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, சீனாவின் வெய் யி-யை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 61-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். 7 சுற்றுகளின் முடிவில் அர்விந்த் சிதம்பரம் 5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பிரக்ஞானந்தா 5 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.