அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தனது அலுவலகத்தில் நுழைந்த முதல் நாளிலேயே பல மிரட்டலான அறிவிப்புகளை வெளியிட்டு உலக நாடுகளை உலுக்கி உள்ளார். குறிப்பாக, ‘உலகின் உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன்’ என கூறியிருக்கும் டிரம்ப், பல்வேறு நாடுகளுக்கு எதிராக வர்த்தக போரையும் அறிவித்துள்ளார். அதில் மிகுந்த நட்பு நாடுகளில் ஒன்றான இந்தியாவையும் அவர் விட்டு வைக்கவில்லை.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரி, கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25 சதவீத வரி என பகை நாடுகளுக்கு வரிகளை அள்ளிவீசிய டிரம்ப், சிறிதும் பாரபட்சம் இல்லாமல் இந்தியாவுக்கு 100 சதவீத வரி விதிப்பதாக எச்சரித்துள்ளார்.
‘‘பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் டாலருக்கு மாற்றாக வேறு கரன்சியில் வர்த்தகம் செய்து, டாலரின் மதிப்பை அவர்கள் குறைக்க நினைத்தால், அந்த நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிப்பேன்’’ என டிரம்ப் கூறியிருப்பது, இந்தியாவுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட வர்த்தக போராகவே கருதப்படுகிறது. அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக இருந்து வருகிறது. கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்தியா 77.5 பில்லியன் டாலர் (ரூ.6.6 லட்சம் கோடி) பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால், டிரம்ப் எச்சரிப்பது போல இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்கும் பட்சத்தில் அது இரு தரப்பு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இந்தியாவைப் பொருத்த வரையிலும் இந்த விஷயத்தை மிக கவனமாகவே கையாண்டு வருகிறது.
டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து உடனடியாக பதிலளித்த வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘அமெரிக்க டாலரின் மதிப்பை குறைக்கும் எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. பிரிக்ஸ் அமைப்பில் மாற்று கரன்சிக்கான எந்த ஆலோசனையிலும் இந்தியா ஈடுபடவில்லை’’ என இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். ஆனாலும், இந்தியாவுடன் நட்பு பாராட்டிலும், சில விஷயங்களில் டிரம்ப் மற்ற அமெரிக்க அதிபர்களுடன் முரண்பட்டே நடந்து கொள்கிறார். அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது கூட இந்தியாவுடனான வர்த்தக உறவை குறிப்பிட்டு கூறினார்.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாகவும் வரிகளின் அரசன் இந்தியா என்றும் விமர்சனம் செய்தார். இதற்கு முன், டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் கடந்த 2018ம் ஆண்டில் இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் போன்ற பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். அதே போல இம்முறையும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அவர் விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு இந்தியா எத்தகைய பதிலடி தரும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், ‘‘கடந்த முறை டிரம்ப் வரி உயர்த்திய போது, அமெரிக்காவிலிருந்து ஆப்பிள், வால்நட் போன்ற 26 பொருட்களுக்கு இந்தியா வரி விதித்தது.
இதன் மூலம் வருவாயை ஈடுகட்டியது. இப்போதும் இதே போன்ற பதிலடியை இந்திய அரசு தர வேண்டும். அப்போதுதான் வரி குறைப்பு குறித்து பேச்சுவார்த்தைக்கு அமெரிக்காவை கொண்டு வர முடியும்’’ என்றார். இந்த விஷயத்தில் இந்திய அரசும் எதையும் எதிர்கொள்ளும் நிலைப்பாட்டுடனே உள்ளது. இதனால் தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், இந்தியாவின் மொத்த ஏற்றுமதியான 770.18 பில்லியன் டாலரில் (ரூ.65 லட்சம் கோடி) 10 சதவீத ஏற்றுமதியே அமெரிக்காவை நம்பி உள்ளது.
இதனால் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும், சீனா, கனடா போன்ற நாடுகள் அமெரிக்க சந்தையையே முழுமையாக நம்பி உள்ளன. சீனாவுக்கு 100 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதிலிருந்து சீனா மீள முடியாத பட்சத்தில் அதன் உள்நாட்டு தேவை மேம்படாத பட்சத்தில் சீன பொருட்கள் இந்திய சந்தைகளை ஆக்கிரமிக்கத் தொடங்கும். அது இந்தியாவின் உற்பத்தியை பாதிப்பதோடு, பொருளாதாரத்திலும் சிக்கலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
* உக்ரைன் போர் என்னவாகும்?
ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அதிபரானதும் அவர் ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக தாக்கி பேசி உள்ளார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வராவிட்டால் பொருளாதார ரீதியாக எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என மிரட்டி இருக்கிறார். அதே சமயம், முன்னாள் அதிபர் பைடன் போல உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் நிதி உதவி வழங்க டிரம்ப் விரும்பவில்லை. ரஷ்யாவுக்கு அழுத்தம் தரும் அதே வேளையில் உக்ரைனை கைவிடுவதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். எனவே, டிரம்பின் மிரட்டலுக்கு புடின் அடிபணியாத பட்சத்தில், உக்ரைனுக்கு எந்த உதவியும் கிடைக்காமல் அந்நாடு ரஷ்யாவிடம் சரணமடைய வேண்டிய நிலையும் வரலாம்.
டாப்-5 வர்த்தக கூட்டாளிகள்
இந்தியாவின் முதல் 5 வர்த்தக கூட்டாளிகள்
நாடு ஏற்றுமதி இறக்குமதி
சீனா ரூ.1.4 லட்சம் கோடி ரூ.8.6 லட்சம் கோடி
அமெரிக்கா ரூ.6.5 லட்சம் கோடி ரூ.3.5 லட்சம் கோடி
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.3 லட்சம் கோடி ரூ.4 லட்சம் கோடி
ரஷ்யா ரூ.36 ஆயிரம் கோடி ரூ.5.2 லட்சம் கோடி
சவுதி அரேபியா ரூ.98 ஆயிரம் கோடி ரூ.2.7 லட்சம் கோடி
* உலக சுகாதார நிறுவனத்திற்கு மூடு விழா
அதிபராக பதவியேற்ற டிரம்ப் வெளியிட்ட உத்தரவுகளில், உலக சுகாதார நிறுவனத்திலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. உலகில் பரவும் தொற்றுநோய்கள், சுகாதார பிரச்னைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்து வருகிறது. ஆனால் கொரோனா பரவலின் போது உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அந்த அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய டிரம்ப் தற்போது உலக சுகாதார நிறுவனத்திற்கு தரும் நிதி உதவியை முழுமையாக நிறுத்தப் போவதாக கூறியிருக்கிறார். உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய 2 ஆண்டு பட்ஜெட் ரூ.57 ஆயிரம் கோடி. இதில் 22 சதவீத நிதியை வழங்குவது அமெரிக்கா தான். எப்போதுமே உலக சுகாதார நிறுவனத்திற்கு அதிக நிதி வழங்கும் நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. எனவே அமெரிக்காவின் நிதி நிறுத்தப்பட்டால் உலக சுகாதார நிறுவனமே முடங்கும் நிலை உள்ளது.
* கடந்த 2023-24ம் நிதியாண்டில் இந்தியா 77.5 பில்லியன் டாலர் (ரூ.6.6 லட்சம் கோடி) பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியான 770.18 பில்லியன் டாலரில் (ரூ.65 லட்சம் கோடி) இது 10 சதவீதம்தான்.
* சீனாவுக்கு 100 சதவீத வரியை அமெரிக்கா விதிக்கும் பட்சத்தில் அந்நாட்டின் பொருளாதாரத்தில் அது பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். இதனால், சீனா பொருட்கள் மலிவு விலையில் இந்திய சந்தைகளில் குவிக்க துவங்கும். இது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை பாதிப்பதோடு, பொருளாதாரத்திலும் சிக்கலை ஏற்படுத்தும்.
* ஒட்டுமொத்த இந்திய வர்த்தகம்
நிதியாண்டு 2023-24
மொத்த ஏற்றுமதி ரூ.65 லட்சம் கோடி
மொத்த இறக்குமதி ரூ.75 லட்சம் கோடி
மொத்த வர்த்தகம் ரூ.140 லட்சம் கோடி
வர்த்தக பற்றாக்குறை ரூ.10 லட்சம் கோடி
* 2018ல் டிரம்புக்கு பதிலடி கொடுத்த இந்தியா
கடந்த 2018ம் ஆண்டில் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் ஸ்டீல், அலுமினியம் போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவிலிருந்து ஆப்பிள், வால்நட் போன்ற 26 பொருட்களுக்கு இந்தியா வரி விதித்து பதிலடி கொடுத்தது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி பொருட்கள்
அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்கள்:
* ஜவுளி
* நூல்
* துணி வகைகள்
* ரெடிமேட் ஆடைகள்
* வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள்
* தொலைதொடர்பு கருவிகள்
* ஐசி இன்ஜின்கள்
* போக்குவரத்து சாதனங்கள்
* இரும்பு
* எஃகு
* கிரானைட்
The post பிரிக்ஸ் நாடுகளுக்கு 100% சதவீத வரி விதிப்பதாக மிரட்டி வர்த்தக போரை அறிவித்த டிரம்ப்: இந்தியாவின் பதிலடி எப்படியிருக்கும்? appeared first on Dinakaran.