காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வதேராவை நியமித்திருக்கிறார் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி.
கடந்த சில ஆண்டுகளாகத் தொண்டர்களால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் கட்சிப் பணிகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பொறுப்பு பிரியங்காவுக்குத் தரப்பட்டிருக்கிறது. மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நேரத்தில், இந்த நியமனம் காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புதிய உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.
குடும்ப அரசியலுக்கு மேலும் ஒரு அடையாளம் இது என்று இந்த அறிவிப்பு வெளியான உடனேயே பாஜக கருத்து தெரிவித்திருக்கிறது. உத்தரபிரதேசம் தங்களிரு கட்சிகளின் கோட்டை என்று உறுதியாக நம்பும் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் இரண்டும் ஆளுக்கு 38 மக்களவைத் தொகுதிகள் என்று பிரித்துக்கொண்டு கூட்டணியை அறிவித்து, காங்கிரஸ் கட்சியை அப்பட்டமாக ஒதுக்கிவிட்டன. காங்கிரஸுக்குப் புத்துயிர் ஊட்ட வலுவான நடவடிக்கை தேவை என்ற நிலையில், பிரியங்கா களமிறக்கப்பட்டிருக்கிறார்.
கட்சியின் தலைவராக இருந்த சோனியா காந்தி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சிப் பணிகளைக் கவனிக்கவும் ராகுல் காந்திக்கு உதவவும் பிரியங்கா அவசியப்படுகிறார். அமேதி, ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் சோனியா, ராகுலுக்காகப் பிரச்சாரம் செய்து அனுபவம் பெற்றுள்ளார் பிரியங்கா. கட்சியிலும் ஆட்சியிலும் அவருக்குப் பெரிய பொறுப்புகள் காத்திருக்கின்றன. காங்கிரஸ் கட்சி தன்னுடைய வளர்ச்சிக்கும் செயல்பாட்டுக்கும் ஒரேயொரு குடும்பத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறது என்று பேசப்பட்டாலும், அதை ஒரு குறையாக அந்தக் குடும்பமும் தொண்டர்களும் கருதாதபோது, விமர்சனங்கள் எடுபடாமல்போகின்றன. அது மட்டுமின்றி, இடதுசாரிக் கட்சிகளைத் தவிர, எல்லா அரசியல் கட்சிகளிலும் வாரிசுகள் களமிறங்குவதும் களமிறக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது.
மாநிலக் கட்சிகளில் குடும்ப உறுப்பினர்கள் வரம்பின்றி கட்சிப் பதவிகளைப் பெறுவதோடு, பதவிக்காக அவர்களுக்குள்ளேயே பகிரங்கச் சண்டைகள் நடக்கும் அளவுக்கு நிலைமை முற்றிவருகிறது. ராகுலைப் பொறுத்தவரை நிதானமானவராகவும், துணிச்சல்காரராகவும், உரிய தருணத்தில், உரிய நடவடிக்கைகளை எடுப்பவராகவும் இருக்கிறார். கட்சியின் மூத்த தலைவர்களுக்கு உரிய மரியாதையையும் பங்களிப்பையும் அளிக்கத் தவறுவதில்லை. தோழமைக் கட்சிகளைக் கண்ணியமாகவும் மரியாதையாகவும் நடத்துகிறார். பொறுப்பேற்கும் அவசியம் ஏற்பட்டால் பிரதமராவேன் என்று கூறியவர், தன்னையே பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்து ஆதரவு திரட்டத் தொடங்கவில்லை.
காங்கிரஸில் குடும்ப உறுப்பினர்கள் தலைமைப் பதவிகளில் இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் அக்கட்சி எப்போதுமே முன்னிலையில் இருக்கிறது. ஆனால், மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள வேண்டுமென்றால், அக்கட்சிக்குச் சவால்விடும் வகையில் காங்கிரஸும் வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்