அண்ணாநகர்: சூளைமேடு பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் படுகாயம் அடைந்ததுடன் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன. பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் சினிமா காட்சி போல் சம்பவம் நடந்துள்ளது. சென்னை சூளைமேடு அபித் நகர் வழியாக நேற்று மாலை படுவேகமாக சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன் அந்த வழியாக சென்ற பெண் மீது மோதி அவரை தரதரவென இழுத்துச் சென்றது. இது பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் கூச்சல் போட்டபோதும் நிற்காமல் சென்ற கார், முன்னாடி சென்ற பைக் மீது மோதிவிட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் மீது மோதி நொறுக்கியதுடன் அங்குள்ள மெக்கானிக் கடையில் புகுந்து கார் நின்றுவிட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து காயம் அடைந்த பெண் உட்பட 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு விசாரித்தனர். இதில், விபத்து ஏற்படுத்தியவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் (49) என்பதும் நேற்று சூளைமேடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துவிட்டு அவரது காரை எடுத்துகொண்டு சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிகிறது. இதையடுத்து செந்தில் மீது வழக்குபதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் சமூவலை தள பக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் சாலையில் கார் தாறுமாறாக ஓடியதில் பெண் படுகாயம்; வாகனங்கள் சேதம்: சூளைமேட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.