பிரேசிலியா: பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ‘சாம்பா’ இசை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளையுடன் மோடி வெளிநாட்டு பயணம் முடியும் நிலையில், அதன்பின் அவர் நாடு திரும்புவார். அரசுமுறைப் பயணமாக பிரேசில் சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்றிரவு தலைநகர் பிரேசிலியாவை சென்றடைந்தார். அங்குள்ள விமான நிலையத்தில் பிரேசில் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜோஸ் முசியோ மான்டெய்ரோ பில்ஹோ அவரை வரவேற்றார். இந்த வரவேற்பை மேலும் மெருகூட்டும் விதமாக, ‘படாலா முண்டோ’ என்ற இசைக் குழுவினர், பிரேசிலின் பாரம்பரிய ஆப்பிரிக்க – பிரேசிலிய இசையான ‘சாம்பா-ரெக்கே’ இசைக்கருவிகளை முழங்கி பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். அதே சமயம், விமான நிலையத்தில் திரண்டிருந்த பிரேசிலில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ெதாடர்ந்து விமான நிலையத்திலிருந்து பிரேசிலியாவில் உள்ள தான் தங்கியிருக்கும் ஓட்டலுக்குச் சென்ற பிரதமர் மோடியை, அங்கேயும் இந்தியக் கொடிகளுடன் கூடியிருந்த குழந்தைகள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். அவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர், ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசார மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார். நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கலைஞர்களைப் பாராட்டி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி, தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் இந்தியா – பிரேசில் இடையேயான கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘பிரேசிலில் இந்திய வம்சாவளியினர் அளித்த அன்பான வரவேற்பானது, வெளிநாடுகளில் வசிக்கும் நமது மக்கள், நம்முடன் எவ்வளவு ஆழமாக இணைந்துள்ளனர் என்பதை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது’ என பதிவிட்டிருந்தார். பிரேசில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு நமீபியா செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி நந்தி தைத்வாவை சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார். நமீபியாவின் நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டுக்கூட்டத்தில் அவர் உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளையுடன் தனது 8 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை இரவு அல்லது நாளை மறுநாள் பிரதமர் மோடி ெடல்லி திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post பிரேசிலில் இந்திய வம்சாவளியினர் பாசமழை; பிரதமர் மோடிக்கு ‘சாம்பா’ இசை முழங்க வரவேற்பு: நாளையுடன் வெளிநாட்டு பயணம் முடிகிறது appeared first on Dinakaran.