வாஷிங்டன்: பிறப்புரிமை அடிப்படையிலான அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்யும் உத்தரவில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டிருப்பது, அந்நாட்டில் வசிக்கும் இந்தியா உள்பட பல வெளிநாட்டவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்க அரசியல் சாசனத்தில் 1868-ல் மேற்கொள்ளப்பட்ட குடியுரிமை தொடர்பான 14-வது திருத்தத்தத்தின்படி, அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகள் அந்நாட்டின் குடியுரிமையைப் பெற்றவர்கள். அந்தக் குழந்தைகளின் பெற்றோர் அமெரிக்கராக இல்லாவிட்டாலும்கூட, அந்தக் குழந்தைக்கு குடியுரிமை உண்டு. அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலம் குறித்து சட்ட ரீதியாக தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் எழுந்ததை அடுத்து இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.