வாஷிங்டன்: பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து என்ற டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட டொனால்ட் டிரம்ப், பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியர்களிடையே பெரிதும் பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, பிப்.19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே ‘அமெரிக்க குடியுரிமை’ கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் பிரசவ தேதிக்கு முன்பே சிசேரியன் மூலம் குழந்தைகளை பிரசவிப்பது ஆபத்தானது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வாஷிங்டன், அரிசோனா, இலினாயிஸ் மற்றும் ஓரிகான் உள்ளிட்ட 22 மாகாண அரசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, டிரம்ப்பின் அறிவிப்புக்கு தற்காலிக தடை விதித்து சியாட்டில் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இது ஒரு வெளிப்படையான அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான உத்தரவு என்று விமர்சித்த நீதிபதி, தான் 40 ஆண்டுகளுக்கு மேலாக நீதிபதியாக இருப்பதாகவும், இப்படியொரு அரசியலமைப்பு முரணான வழக்கை பார்த்ததாக நினைவு இல்லை என்றும் தெரிவித்தார். அமெரிக்க குடியுரிமை சட்டங்களை மறுவரையறை செய்யும் டிரம்பின் முயற்சிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் என்று கூறி இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
The post பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை.. டிரம்ப் உத்தரவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்..!! appeared first on Dinakaran.