சேலம்: சேலத்தில் நடந்த திமுக கொடியேற்று விழாவில், 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளதாக அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்தார். சேலம் மாநகராட்சி 42வது வார்டில் திமுக பவள விழா ஆண்டையொட்டி மிசா மாரியப்பன், மொழிப்போர் தியாகி ராமலிங்கம் நினைவு கொடி கம்பத்தில் இன்று கொடியேற்று விழா நடந்தது. மாநகர துணை செயலாளர் வக்கீல் கணேசன் தலைமை வகித்தார். மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் கு.சி.வெ. தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ரகுபதி, வார்டு கவுன்சிலர் மஞ்சுளா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு, திமுக கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: திமுக முன்னோடிகளான மாரியப்பன், ராமலிங்கம் ஆகியோர் நெருக்கடி காலத்தில் கலைஞருக்கு துணை நின்று கொள்கை பிடிப்போடு பணியாற்றியவர்கள். அவர்களுடைய கொள்கை பிடிப்பு, மொழிபற்று நமக்கு வழிகாட்டியாக இருக்கும். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25 ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி வருகிறார். அவரை பின்பற்றி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்கு உழைத்தவர்களை கவுரவப்படுத்தி கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 90சதவீதத்தை கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்படுத்துகின்ற திட்டங்களை மற்ற மாநிலங்களும், வெளிநாடுகளும் பின்பற்றுகின்றன. அப்படியோரு பொற்கால ஆட்சியை, முன்னேற்றமடைந்த மாநில ஆட்சியை முதல்வர் நடத்தி கொண்டிருக்கிறார். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போதும் பொதுமக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர்கள் அசோகன், லோகநாதன், மாநகர் பொருளாளர் ஷெரீப், பகுதி செயலாளர்கள் ஏ.எஸ்.சரவணன், தனசேகரன், ஜெகதீஷ், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்வர், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் அழகாபுரம் முரளி, நெசவாளர் அணி மாநகர் அமைப்பாளர் ஓ டெக்ஸ் இளங்கோவன், கவுன்சிலர் கோபால், மகளிரணி ராஜேஸ்வரி, தேவி பாலா, வார்டு செயலாளர் சத்தியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post பிற மாநிலங்கள் பின்பற்றும் திட்டங்கள் 90% தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றி உள்ளார்: அமைச்சர் ராஜேந்திரன் பேச்சு appeared first on Dinakaran.