திருப்புவனம்: திருப்புவனம் அருகே பிளஸ் 1 பொதுத்தேர்வு அறையில் கண்காணிப்பாளராக இருந்த தலைமையாசிரியர் லேப்டாப் பார்த்ததால் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 1 பொதுத்தேர்வில் நேற்று ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. தேர்வு மைய கண்காணிப்பாளராக திருப்பாச்சேத்தி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரான ஜெயகுமார் பணியில் இருந்துள்ளார்.
அவர் தேர்வு எழுதியவர்களை கண்காணிக்காமல் லேப்டாப்பை திறந்து வைத்து படம் பார்த்தபடி வேறு வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, பறக்கும் படை துணை கண்காணிப்பாளர் தனலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் ஆய்விற்கு வந்துள்ளனர். தேர்வு நடக்கும் நேரத்தில் மாணவர்களை கண்காணிக்காமல், லேப்டாப் பார்த்த கண்காணிப்பாளரை அதிகாரிகள் கண்டித்தனர். மேலும், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் தேர்வு மையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். அந்த தேர்வு மையத்திற்கு உடனடியாக மாற்று கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். லேப்டாப் பார்த்த ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
The post பிளஸ் 1 பொதுத்தேர்வு அறையில் லேப்டாப்பில் படம் பார்த்தபடியே பணி செய்த தலைமை ஆசிரியர்: தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு appeared first on Dinakaran.