புதுடெல்லி: “வயதான காலத்தில் பிள்ளைகள்கவனிக்காவிட்டால், பெற்றோர் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, அவரது மகன் சரியாக கவனிக்கவில்லை. இதையடுத்து, மகனுக்கு வழங்கிய சொத்தை மீட்டுத் தர வேண்டும். அந்த சொத்துகளுக்கான தான பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி ம.பி. உயர் நீதிமன்றத்தில் அந்த பெண் வழக்கு தொடுத்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், “வயதான பெற்றோரை பிள்ளைகள் கவனிக்கவில்லை என்ற காரணத்துக்காக தான பத்திரத்தை (தான செட்டில்மென்ட்) ரத்து செய்ய முடியாது. மேலும், பிள்ளைகள் கவனிக்காவிட்டால், தானப் பத்திரம் செல்லாது என்று எந்த நிபந்தனையையும் மனுதாரர் விதிக்கவில்லை. எனவே, தான பத்திரத்தை ரத்து செய்ய முடியாது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.