புதுடெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்தார். ஒவ்வொரு பட்ஜெட்டுக்கும் அவர் அணிந்துவரும் சேலை மக்கள் மத்தியில் பேசப்படும். இந்த ஆண்டும் அவரது சேலை தனிக் கவனம் பெற்றது. அவரது பழுப்பு வெள்ளை நிறச் சேலையில் மதுபனி ஓவியங்கள் அச்சாகி இருந்தன. இவை, பிஹாரின் மிதிலா பகுதியினரால் வரையப்படும் பிரபல ஓவியங்கள் ஆகும்.
ஒவ்வொரு பட்ஜெட்டிலும் ஒரு குறிப்பிட்ட மாநில பாரம்பரியத்தை தனது சேலையில் அமைச்சர் நிர்மலா வெளிப்படுத்தி வருகிறார். இந்த முறை அவரது சேலை ஓவியத்தில் பிஹாரின் முக்கியத்துவம் வாய்ந்த மீன், மக்கானா எனும் உலர்ந்த பழம், வெற்றிலை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த வருட இறுதியில் பிஹாரில் தேர்தல் வர உள்ளது. இதை மனதில் வைத்து மக்கானா பயிரோடுவோரின் வளர்ச்சிக்காக, பட்ஜெட்டில் தேசிய வாரியம் அமைக்கும் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இது, மக்கானா விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கை ஆகும். மத்திய அமைச்சர் நிர்மலா, சமீபத்தில் மதுபனி சென்றிருந்தார். அங்குள்ள மிதிலா ஆர்ட் இன்ஸ்டிடியூட் சென்றவருக்கு அங்கிருந்த பிரபல ஓவியர் துலாரி தேவி இந்த சேலையை பரிசாக வழங்கினார். அதில் அச்சாகியிருந்த ஓவியங்களை துலாரி தேவி வரைந்திருந்தார். இதையே பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் நிர்மலா அணிந்து வந்தார்.