பிஹாரின் அர்ரா நகரில் உள்ள நகைக்கடையில் நேற்று ரூ.25 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிஹாரின் போஜ்பூர் மாவட்டம், அர்ரா நகரில் பிரபல நகைக்கடை செயல்படுகிறது. இந்த நகைக்கடை நேற்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது. காலை 10.15 மணிக்கு கடையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது 2 மர்ம நபர்கள் கடைக்கு வந்தனர். வாயிலில் நின்றிருந்த காவலர்களிடம், மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளை பறித்து கொண்டனர். பின்னர் 2 மர்ம நபர்களும் கடைக்குள் நுழைந்தனர். அந்த நேரத்தில் மேலும் 4 மர்ம நபர்கள் நகைக்கடைக்குள் வந்தனர். அனைவரின் கைகளிலும் கைத்துப்பாக்கிகள் இருந்தன.