புதுடெல்லி: பிஹார் வரைவு வாக்காளர் பட்டியலில் தன்னுடைய பெயர் இல்லை என்ற தேஜஸ்வி யாதவின் புகாருக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிஹார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “வரைவு வாக்காளர் பட்டியலில் என்னுடைய பெயர் விடுபட்டுள்ளது இதன் மூலம் நான் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்படும். இதுபோல ஏராளமானவர்களின் பெயர் விடுபட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி தம்பதியின் பெயர் கூட விடுபட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்” என்றார்.