சென்னை: பி.எம் ஸ்ரீ பள்ளிகள் விவகாரத்தில் தவறான தகவல் பரப்புவதால் உண்மைகளை மாற்ற முடியாது என்று ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி தந்து உள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: பி.எம் ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கு தமிழ்நாடு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தை நான் தவறாக வழிநடத்தியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர் ஸ்டாலினும் என் மீது குற்றம் சாட்டியிருந்தனர். நாடாளுமன்றத்தில் நான் கூறிய கருத்துக்களில் உறுதியாக இருக்கிறேன்.
மார்ச் 15, 2024 தேதியிட்டு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அனுப்பி இருந்த ஒப்புதல் கடிதத்தையும் பகிர்ந்து கொள்கிறேன். தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என முதலமைச்சரை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அரசியல் லாபங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் உள்ள நமது குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை தாருங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலடியாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் உண்மைகளை மாற்றமுடியாது.
கடந்த 2024ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி எழுதிய கடிதத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்பதாக கூறவில்லை. குழு அமைக்கப்படும், அதன் பரிந்துரைப்படி திட்டத்தில் சேருவது பற்றி முடிவு என்றே கூறினோம். தமிழ்நாட்டின் கல்வி முன்மாதிரியானது. தவறான தகவலை பரப்புவதால் உண்மை மாறிவிடாது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு தொடர்ந்து ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. தமிழ்நாட்டின் கல்வி மாதிரியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
The post பி.எம் ஸ்ரீ பள்ளிகள் விவகாரம்: தவறான தகவல் பரப்புவதால் உண்மைகளை மாற்ற முடியாது: ஒன்றிய அமைச்சருக்கு அன்பில் மகேஷ் பதிலடி appeared first on Dinakaran.