இந்தியாவின் வனப்பரப்பு அறிக்கை – 2023 சமீபத்தில் வெளியாகியுள்ளது. இதில், நாட்டின் மொத்த பரப்பில் 25 சதவீதம் காடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு ஹெக்டேருக்கு அதிகமான பரப்பில் உள்ள காடுகளின் அளவு தனியாகவும், அதற்கு குறைவான இடத்தில் உள்ள மரங்களின் அடர்த்தி தனியாகவும் பிரிக்கப்பட்டு இஸ்ரோவின் செயற்கைக் கோள் உதவியுடன் கணக்கிடப்பட்டுள்ளது. இதில், 21.76 சதவீதம், அதாவது 7.15 லட்சம் சதுர கி.மீ. பரப்பில் காடுகள் இருப்பதாகவும், 3.41 சதவீதம் (1,289 சதுர கி.மீ) மரங்களின் அடர்த்தி இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு இருந்த அளவைவிட சொற்ப அளவிலேயே காடுகளின் அடர்த்தி அதிகரித்துள்ளது. காடுகளின் அளவை பொருத்தவரை, நாட்டிலேயே முதலிடத்தில் மத்தியப் பிரதேசம் உள்ளது. அங்கு 85 லட்சத்து 724 சதுர கி.மீ. பரப்பில் காடுகள் பராமரிக்கப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளில் காடுகளின் அளவை அதிகரித்துள்ள மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடத்தில் உள்ளது.