டிசி காமிக்ஸின் முழுமுதற் சூப்பர் ஹீரோ என்றால் அது ‘சூப்பர் மேன்’ தான் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். மற்ற சூப்பர் ஹீரோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக பார்க்கப்படும் சூப்பர் மேன் கதாபாத்திரத்தை உலகம் முழுவதும் தெரியாதவர்களே இருக்க முடியாது எனலாம். காமிக்ஸ், கார்ட்டூன், பொம்மைகள், திரைப்படம், வெப் தொடர்கள் என சூப்பர் மேன் இதுவரை பல வடிவம் பெற்றுள்ளது.
திரைப்படங்களை பொறுத்தவரை மறைந்த கிறிஸ்டோபர் ரீவ் தொடங்கி கடைசியாக சூப்பர் மேனாக நடித்த ஹென்றி கெவில் வரை படம் வெற்றி, தோல்வி என்பதை தாண்டி அவரவருக்கு என தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் தற்போது ஜேம்ஸ் கன் இயக்கும் புதிய படத்தின் மூலம் சூப்பர் மேன் பொறுப்பை ஏற்றிருப்பவர் டேவிட் காரன்ஸ்வெட்.