செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ரூ.1,285 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் 508 கோடி செலவில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியில் 4 ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் பல்வேறு திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் தொடர்பாக அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தல், நகர்ப்புற பகுதிகளில் பட்டா வழங்கும் திட்ட தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காரில் புறப்பட்டார். அவர் செல்லும் வழியில் திருக்கழுக்குன்றத்தில் ‘‘ரோடு ஷோ’வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் கூட் ரோட்டில் காரில் வந்து முதல்வர் இறங்கியதும், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.தமிழ்மணி, பேரூர் திமுக செயலாளர் ஜி.டி.யுவராஜ், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் எல்.இதயவர்மன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன் ஆர்.டி.அரசு, துணை சேர்மன் எஸ்.ஏ.பச்சையப்பன் ஆகியோர் தலைமையில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திருப்போரூர் தொகுதியிலிருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சாலை மார்க்கமாக நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆண்கள், பெண்கள் என பலரும் முதல்வருக்கு கைகுலுக்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். நரிக்குறவர்கள் பாசத்துடன் வழங்கிய பாசிமணிகளை முதல்வர் பெற்று கொண்டார். கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் சாம்சன் ராஜா, முதல்வருக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பொதுமக்களிடம் முதல்வர் மனுக்களை பெற்றார். அந்த நேரத்தில் லேசாக சாரல் மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் வரை பொதுமக்களிடம் முதல்வர் மனுக்களை பெற்றார்.
இந்த ரோடு ஷோவை முடித்து விட்டு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டார். அவருக்கு மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், ரூ.1,285 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். பின்னர் நகர்ப்புற பகுதிகளில் பட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். பின்னர், 20 ஆயிரம் பேருக்கு பட்டா, மகளிர் சுய உதவி குழுவினருக்கு தொழில் கடன் உதவி, பயிர் கடன் மற்றும் விவசாயிகளுக்கு ஆடு, மாடு மற்றும் டிராக்டர் என மொத்தம் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் தா.ேமா.அன்பரசன், செல்வம் எம்பி, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஒன்றிய குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகள் திறப்பு; ரூ.1,285 கோடியில் 50ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.