புதுடெல்லி: “வரி செலுத்துவோரின் மின்னஞ்சல், சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிக் கணக்குகளை ஐ.டி அதிகாரிகள் ஆராய்வதற்கான அனுமதியை வழங்கும் புதிய வருமான வரிச் சட்டம், நாட்டு மக்களை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு சென்றுவிடும்” என்று காங்கிரஸ் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "அவர்கள் (மத்திய அரசு) பெகாசஸ் மூலம் நம்மை உளவு பார்த்தார்கள். இப்போது, அவர்கள் நமது தனிப்பட்ட வாழ்க்கையை முழுவதுமாக எடுத்துக்கொள்ள பார்க்கிறார்கள். நாட்டு மக்களின் டிஜிட்டல் வாழ்க்கைக்குள் நுழைவதற்கான அதிகாரத்தை வரி அதிகாரிகளுக்கு புதிய வருமான வரிச் சட்டம் வழங்குகிறது. வாரன்ட் இல்லாமல், அறிவிப்பு இல்லாமல் நமது தனியுரிமையைப் பறிக்க வெறும் சந்தேகம் மட்டுமே போதும். இது கண்காணிப்பு. நாம் அனைவரும் இதை சந்தேகத்துக்கு இடமின்றி எதிர்க்க வேண்டும்.