புதுகை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்த கீழக்குறிச்சி அய்யனார் கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதற்காக புதுகை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 600 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லப்பாண்டியன், விராலிமலை எம்எல்ஏ விஜயபாஸ்கர், இலுப்பூர் ஆர்டிஓ அக்பர் அலி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மிக்சி, மின்விசிறி, சேர் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.
The post புதுகை அருகே ஜல்லிக்கட்டு; 600 காளைகள் ஆவேச பாய்ச்சல்: 250 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.