*காம்பவுண்ட் சுவர், கார், பழைய வீடு சேதம்
புதுக்கடை : குமரி மேற்கு கடற்கரை சாலை புதுக்கடை வழியாக செல்கிறது. நேற்று (9ம் தேதி) அதிகாலை 5:30 மணி அளவில் சிமெண்ட் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி ஒன்று நித்திரவிளை நோக்கி சென்று கொண்டிருந்தது. பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் அருகே வரும்போது வளைவான பகுதியில் வைத்து திடீரென லாரியின் அச்சு ஒடிந்து லாரி அந்த சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு வீட்டு காம்பவுண்ட் சுவரில் மோதியது. அதே வேகத்தில் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி உள்ளே இருந்த ஒரு பழைய வீட்டில் மோதியது. அந்த வீட்டில் தற்போது ஆட்கள் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
மோதிய வேகத்தில் பழைய வீடு சேதமடைந்து, லாரி கவிழ்ந்தது. இதில் ஒரு தென்னை மரம் முறிந்து காம்பவுண்ட் உள்ளே நின்ற ஒரு காரும் சேதமடைந்தது. மேலும் லாரியின் முன்பகுதியில் வீட்டின் காங்கிரீட் இடிந்து விழுந்ததால் லாரியின் உள்ளே இருந்த டிரைவர் வெளியே வரமுடியாமல் மாட்டிக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தீயணைப்பு துறை மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் லாரியின் முன்பகுதியில் சிக்கிய டிரைவரை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து நாகர்கோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் நவீன ஆயுதங்களுடன் வந்து, வீடு இடிந்த காங்கிரீட் சிலாபுகளை அகற்றி. டிரைவரை மீட்டனர்.
சுமார் இரண்டு மணி நேரம் டிரைவர் லாரியில் மாட்டியதால் அவரது இடுப்பு பகுதியின் கீழ் பகுதி மற்றும் கால் ஒன்று சேதமடைந்ததாக கூறப்படுகிறது. அவரை உடனடி 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, அங்கிருந்து குமரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனார். காயமடைந்தவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என தெரிய வந்துள்ளது. இதே பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதுபோன்று மற்றொரு விபத்தும் ஏற்பட்டது குறிப்பிடதக்கதாகும்.
The post புதுக்கடை அருகே பார்த்திபபுரத்தில் வீட்டு சுவரை உடைத்து உள்ளே புகுந்து கவிழ்ந்த டாரஸ் லாரி appeared first on Dinakaran.