புதுக்கோட்டை: தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. களத்தில் சீறிப்பாய்ந்த 800 காளைகளுடன், 300 வீரர்கள் மல்லுக்கட்டினர். தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையிலும் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் இந்தாண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று (4ம் தேதி) நடந்தது.
தச்சங்குறிச்சி புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி விழாக்குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டியில் பங்கேற்க காளைகளை அதன் உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பெயர்களை பதிந்தனர். இதற்காக வாடிவாசல், மேடைகள், இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. காளைகள் ஓடும் இடத்தில் தேங்காய் நார் பரப்பப்பட்டது. இந்த ஏற்பாடுகளை கலெக்டர் அருணா கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8.30 மணிக்கு கோலாகலமாக துவங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமின்றி தஞ்சை, அரியலூர், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, சிவகங்கை உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் அழைத்து வரப்பட்டன. 300 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வீரர்கள், கால்நடைகளுக்கு தலைைமை மருத்துவர் ரஞ்சித்குமார் தலைமையில் 50 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்தனர்.
போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வாடிவாசலில் முதலில் கோயில் காளையும், அடுத்தடுத்து மற்ற காளைகளும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. ஒரு சுற்றுக்கு 25 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
களத்தில் சீறிப்பாய்நத காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு போக்கு காட்டியது. போட்டியை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்ததுடன் வீரர்களை கைதட்டியும், ஆரவாரம் செய்தும் உற்சாகப்படுத்தினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பைக், கட்டில், சில்வர் குடம், பீரோ, ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகள் முட்டி காயமடையும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், தயாராக நிறுத்தப்பட்டிருந்தனர். ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையில் 350 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழா மேடையில் மோதல்
ஜல்லிக்கட்டு துவங்கிய சிறிது நேரத்தில் விழா மேடையில் சிலர் ஏறினர். அப்போது யார் மேடையில் அமர்வது என்பதில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் சுமார் 10 நிமிடம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி மேடையை விட்டு கீழே இறக்கி விட்டனர். பின்னர் போட்டி துவங்கி நடந்தது.
The post புதுக்கோட்டையில் இந்த ஆண்டின் முதல் போட்டி; ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடக்கம்: 800 காளைகளுடன் 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.