புதுச்சேரி நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 1980-களில், மறைமலை அடிகள் சாலையில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ராஜீவ்காந்தி பேருந்து நிலையம் காலப்போக்கில் கடும் இடநெருக்கடியை சந்தித்தது. இதை இடித்துவிட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையம் கட்ட திட்டமிடப்பட்டது. இப்பணி கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.29.55 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
புதிய பேருந்து நிலையத்தின் பணிகள் ஒருபுறம் தொடங்கி நடக்க, தொடர்ந்து அதே பகுதியில் பேருந்து நிலையம் இயங்கப்பட்டது. ‘பேருந்து நிலையத்தை முழுமையாக காலி செய்து கொடுத்தால் மட்டுமே பணிகளை விரைந்து முடிக்க முடியும்’ என ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது.