புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியையே விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் செயல்பாடுகள் உள்ளது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து அரசுக்கு சொந்தமான பல சொத்துக்கள் விஞ்ஞான ரீதியில், சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், அங்கு உள்ள இடங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கும், பல வெளிமாநில தொழில் அதிபர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது.