புதுச்சேரி: புதுச்சேரியின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ரூ. 4,750 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசுக்கு திட்ட வரையறை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது என்று துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தெரிவித்தார். மேலும், காரைக்கால் துறைமுகம் ஸ்மார்ட் மீன்பிடி துறைமுகமாகிறது என்றும் குறிப்பிட்டார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதனின் குடியரசு தினவிழா உரையில் கூறியிருப்பதாவது: 'பெஞ்சல்' புயலின்போது, கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு பெருமழையை நாம் சந்தித்து இருக்கிறோம். இது நமக்கு சில பாடங்களைச் சொல்லிக் கொடுத்து இருக்கிறது. நமது உள்கட்டமைப்பில் எங்கே கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிவுறுத்தி இருக்கிறது. அதனை நோக்கி புதுச்சேரி அரசு செயலாற்றிக் கொண்டிருக்கிறது.