புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையோரம் மணல் குன்றுகளை பாதுகாக்கும் புதிய திட்டத்திற்காக பேரவைத் தலைவர் செல்வம் மரக்கன்று நட்டு பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரியை பொருத்தவரை 11 சதவீதத்துக்கு மட்டுமே காடுகள், மரங்கள் உள்ளன. இந்திய காடுகள் அறிக்கையின்படி குறைந்தபட்சம் 25 சதவீதம் பசுமை இருக்க வேண்டும். இந்த இலக்கை படிப்படியாக எட்டுவதற்காக 'பசுமை புதுச்சேரி' என்ற திட்டத்தை புதுச்சேரி அரசு அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 5-ல் தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் ஒரு வீடு ஒரு மரம், நகர்ப்புற தோட்டங்கள், புதுச்சேரியின் பசுமையை அதிகரிக்க கிராமப்புற காடழிப்பு, கோயில் காடுகளை மீட்டெடுத்தல், பசுமை பள்ளி வளாகங்கள், பசுமைத் தொழில் மற்றும் பசுமை அலுவலக வளாகங்கள் என 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.