புதுச்சேரி: லஞ்ச விவகாரம் தொடர்பாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ, ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. மேலும், தலைமைப்பொறியாளர் அறை சீல் வைக்கப்பட்டது.
புதுவை பொதுப்பணித்துறையில் தலைமை பொறியாளராக இருப்பவர் தீனதயாளன். இவர் கடந்த 2024 மார்ச்சில் பொறுப்பேற்றார். இவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைக்க காரைக்காலுக்குச் சென்றார். அங்கு காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு சீகல்ஸ் ஓட்டலில் தங்கி இருந்தார். அங்கு அவரை காரைக்கால் பொதுபணித்துறை அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். அரசு ஒப்பந்ததாரர்கள் சிலரும் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களை அங்கு விசாரணைக்கு உட்படுத்தினர்.