புதுச்சேரி / விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த புதுச்சேரி, விழுப்புரம் பகுதியில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ., புதுச்சேரியில் 49 செ.மீ. மழை பெய்துள்ளது. திங்கள்கிழமையைப் பொறுத்தவரையில், 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியது: “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையை கடந்தது. அப்போது, அதிகபட்சம் 90 கி.மீ. வேகம் வரை காற்று வீசியுள்ளது. டிசம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் புதுச்சேரி அருகே புயலாக நிலை கொண்டது.